ஆப்நகரம்

பணம் இல்லாமல் அல்லாடிய நடிகை: மனைவி பிரசவத்திற்காக வைத்திருந்த பணத்தை கொடுத்த மேக்கப் மேன்

கொரோனா லாக்டவுனால் பணம் இல்லாமல் அல்லாடிய தனக்கு மேக்கப் கலைஞர் நிதியுதவி செய்ததாக டிவி நடிகை சோனால் வெங்குர்லேகர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 May 2020, 9:35 am
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சோனால் வெங்குர்லேகர். ஏ தேரி கலியான் தொடர் புகழ் சோனால் கொரோனா லாக்டவுனால் வீட்டில் முடங்கியுள்ளார். இந்த லாக்டவுனால் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் சோனாலுக்கு வருமானம் இல்லை.
Samayam Tamil sonal vengurlekar


அன்றாடம் உழைத்து சாப்பிடுபவர்கள் தான் லாக்டவுனால் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்த்தால் சோனாலும் செலவுக்கு பணம் இல்லாமல் அல்லாடியுள்ளார். இது போன்ற நேரத்தில் யாரிடமும் பணம் கேட்க முடியாமல் சங்கடப்பட்டுள்ளார். சோனால் கையில் காசு இல்லாமல் திணறுவது குறித்து அறிந்த அவரின் மேக்கப் மேன் பங்கஜ் குப்தா சோனாலுக்கு ரூ. 15 ஆயிரம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

பங்கஜிடம் மொத்தமே அந்த அளவு தான் பணம் இருந்துள்ளது. இத்தனைக்கும் பங்கஜின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கே பணத் தேவை இருக்கும். இருந்தும் சோனாலுக்கு பங்கஜ் தாமாக முன்வந்து உதவி செய்தது அவரை நெகிழ வைத்துவிட்டது.

இது குறித்து சோனால் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

எனக்கு பணம் தர வேண்டிய தயாரிப்பாளர் நீண்ட காலமாக பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். அதனால் அடுத்த மாத செலவுக்கு காசு இல்லை என்று என் மேக்கப் மேனிடம் கூறினேன். என் மேக்கப் மேன் இந்த சூழலில் எப்படி தாக்குப்பிடிக்கிறார், அவரின் மனைவி வேறு கர்ப்பமாக உள்ளார், அதனால் பல செலவுகள் இருக்குமே என்று எனக்கு அவரை நினைத்து கவலையாக இருந்தது.

என் மேக்கப் மேன் எனக்கு அனுப்பிய மெசேஜை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த மெசேஜை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மேடம் என்னிடம் ரூ. 15 ஆயிரம் உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் அதை பெற்றுக்கொள்ளுங்கள். என் மனைவிக்கு பிரசவம் ஆகும் நேரம் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று அவர் தெரிவித்தார்.

எனக்கு லட்சக் கணக்கில் பணம் தர வேண்டியவர்கள் நான் போன் செய்தால் அட்டென்ட் செய்வது இல்லை. மேலும் என் எண்ணை பிளாக் செய்வதுடன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எனக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.

என் மேக்கப் மேன் பங்கஜ் குப்தாவை என் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன். அவர் எனக்கு பணம் தருகிறார். அவர் கொடுத்த பணம் பெரிய விஷயம் அல்ல. அவரிடம் பெரிதாக பணம் இல்லாத போதும் அவர் என்னை பற்றி நினைத்தது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

சோனாலின் போஸ்ட்டை பார்த்தவர்கள் பங்கஜ் குப்தாவை பாராட்டியுள்ளனர். வழக்கமாக நடிகைகள் தான் தங்கள் மேக்கப் மேன், ஹேர்ஸ்டைலிஸ்டுகளுக்கு பணம் கொடுப்பார்கள். ஆனால் இங்கு உல்டாவாக நடந்துள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு தேவையானவற்றுக்கு மட்டும் செலவு செய்யுமாறும், எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு தொகையை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சோனாலுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

மனைவி கர்ப்பமாக இருக்கிறார், செலவு உண்டு, எந்த நேரத்திலும் கையில் காசு வைத்திருந்தே ஆக வேண்டும் என்கிற நிலையிலும் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சோனாலுக்கு கொடுக்க முன் வந்த பங்கஜின் குணம் நல்ல குணம். இது போன்ற ஆட்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று நெட்டிசன்கள் நெகிழ்ந்து கமெண்ட் போட்டுள்ளனர்.

லாக்டவுன் முடியுற மாதிரி தெரியல, காதலரை ஆன்லைனில் திருமணம் செய்யும் டிவி நடிகை

அடுத்த செய்தி