ஆப்நகரம்

Justice For Chutki! சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா? சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்

சோட்டா பீமுக்கும் இந்துமதிக்கும் திருமணம் நடந்ததாக பரவும் செய்தி வதந்தி என அதிகாரபூர்வமாக விளக்கம் கிடைத்துள்ளது.

Samayam Tamil 6 Jun 2020, 6:38 pm
சின்னத்திரையில் குழந்தைகளை அதிகம் கவர்ந்த கார்ட்டூன் சோட்டா பீம். அதற்கு இந்தியா முழுவதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் ஹீரோவாக வரும் பீம் கதாபாத்திரம் அதிகம் பிரபலம். அவர்கள் வசித்து வரும் டோலக்பூர் நாட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அங்கு சென்று போராடி தான் ஹீரோ என ஒவ்வொரு முறையும் நிரூபிப்பது போல பீம் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
Samayam Tamil Chhota Bheem


பீமின் நண்பர்கள் கேங்கில் சுட்கி என்ற பெண்ணும் இருப்பார். அவர் அந்த ஊரில் லட்டு செய்து விற்பனை செய்யும் டுன் டுன் ஆண்டியின் மகள். பீமுக்கு சக்தி தரும் லட்டுவை எப்போதும் அவருக்கு சப்ளை செய்பவர் சுட்கி தான்.

மேலும் அந்த கேங்கில் ஜக்கு என்ற குரங்கு, ராஜு என்ற சிறுவன், காலியா என்ற குண்டு பையன் மற்றும் அவனுடனேயே எப்போதும் இருக்கும் குட்டி பையன்கள் டோலு, போலு என சோட்டா பீம் கார்டூனில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் அதிகம் பிரபலம்.

சமீபத்தில் ஒரு எபிசோடில் சோட்டா பீம் சுட்கியை விட்டுவிட்டு டோலக்பூர் நாட்டில் இளவரசி இந்துமதியுடன் குதிரையில் ஜோடியாக செல்வது போல காட்டப்பட்டு உள்ளது. அதன் பிறகு ட்விட்டரில் பீம் மற்றும் இந்துமதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது என தகவல் பரவியது.

இதை பார்த்து கடும் கோபமான சுட்கியின் ரசிகர்கள் ட்விட்டரில் #JusticeForChutki என ட்ரெண்ட் செய்தனர். அதெப்படி சுட்கியை விட்டுவிட்டு பணத்திற்காக இளவரசியை பீம் திருமணம் செய்துகொள்ளலாம் என ட்விட்டர் வாசிகள் கொந்தளித்தனர்.

சிலர் சோட்டா பீம் கதையினை குச் குச் ஹோத்தா ஹே படத்துடனும் ஒப்பிட்டு விமர்சித்தனர். சோட்டா பீம் பற்றி பல மீம்களும் இணையத்தில் பறந்தன.




இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி சோட்டா பீம் கார்ட்டூன் உருவாக்கும் கிரீன் கோல்டு அனிமேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுளள்து. அதில் பீம் - இந்துமதி ஆகியோருக்கு திருமணம் நடந்ததாக பரவிய செய்தி முற்றிலும் பொய் என விளக்கம் அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது..

"சோட்டா பீம் உருவாக்கும் கிரீன் கோல்டு அனிமேஷன் சார்பாக ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். சோட்டா பீம் கதாப்பாத்திரங்கள் மீது நீங்கள் காட்டிய அதிகப்படியான அன்புக்கு நன்றி. இந்த ஷோவில் வரும் கதாப்பாத்திரங்கள் சோட்டா பீம், சுட்கி மற்றும் இந்துமதி இன்னும் குழந்தைகளாகத் தான் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம்."

"இந்த கதாபாத்திரங்கள் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது. அது முற்றிலும் பொய்யானது. அதை பற்றி அனைவரும் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம். "

"குழந்தையாக இருக்கும் அவர்களை குழந்தையாகவே விடுங்கள். அவர்களது அப்பாவித்தனமான வாழ்க்கையில் இந்த காதல், திருமணம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின் மூலமாக வதந்திக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். #KillFakeNews #JusticeforChutki என்றும் அந்த பதிவில் குழுவினர் குறிப்பிட்டு உள்ளனர். அதனால் கொந்தளிப்பில் இருந்த சுட்கி ரசிகர்கள் தற்போது அமைதி ஆகியுள்ளனர்.

அடுத்த செய்தி