ஆப்நகரம்

ரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக்கே போயிடுறேன், உதவி செய்ங்க: டிவி நடிகர் உருக்கம்

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ராஜேஷ் கரீர் தனக்கு உதவி செய்யுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 3 Jun 2020, 6:43 pm
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் கரீர். அவர் தனது குடும்பத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வருகிறார். இந்தி டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பேகுசாராய் சீரியலில் ஷிவாங்கி ஜோஷியின் தந்தையாக நடித்து பிரபலமானவர் ராஜேஷ்.
Samayam Tamil rajesh kareer


கொரோனா வைரஸ் பிரச்சனையால் சின்னத்திரை ஷூட்டிங் எதுவும் நடக்கவில்லை. இதனால் ராஜேஷ் செலவுக்கு பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலைில் அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ராஜேஷ் கூறியிருப்பதாவது,

என் பெயர் ராஜேஷ் கரீர். நான் ஒரு நடிகர். மக்களுக்கு என்னை அடையாளம் தெரியும் என்று நம்புகிறேன். நான் இதை சொல்லியே ஆக வேண்டும். அப்படி சொல்வதற்காக நான் வெட்கப்படவில்லை. ஏனென்றால் என் வாழ்க்கை மோசமாகிக் கொண்டிருக்கிறது. நான் பணத்தேவையில் இருக்கிறேன்.

என் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனக்கு உதவி தேவைப்படுகிறது. நான் கடந்த 15 முதல் 16 ஆண்டுகளாக என் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறேன். ஆனால் ரொம்ப காலமாக எனக்கு வேலை இல்லை. அதிலும் கடந்த 3 மாதங்களாக ஷூட்டிங் நடக்காததால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சுத்தமாக வருமானம் இல்லை.

தயவு செய்து இந்த சூழலில் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களால் முடிந்த ரூ. 200 அல்லது ரூ. 300 கொடுத்தால் கூட அது எனக்கு பேருதவியாக இருக்கும். எப்பொழுது கொரோனா பிரச்சனை எல்லாம் சரியாகி எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை. நான் வாழ விரும்புகிறேன். நான் பஞ்சாபுக்கே திரும்பிச் சென்று ஏதாவது வியாபாரம் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து உங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது செல்போன் எண், வங்கி கணக்கு விபரங்களையும் அவர் அளித்துள்ளார். கொரோனா லாக்டவுனால் அன்றாடம் சம்பாதித்து சாப்பிடும் சின்னத்திரை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லாக்டவுனால் ஷூட்டிங் நடக்காததால் செலவுக்கு காசு இல்லாமல் நடிகர்கள், நடிகைகள் கஷ்டப்படுகிறார்கள்.

அப்படி அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் அல்லாடி வந்த டிவி சீரியல் நடிகர் மன்மீத் க்ரேவால் மும்பையில் உள்ள தன் வீட்டில் கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கி உயிருடன் இருந்ததை பார்த்த அவர் மனைவி உதவி கேட்டு கதற அவருக்கு கொரோனா இருக்குமோ என்று பயந்து யாரும் உதவாததால் அவர் இறந்துவிட்டார்.

அவர் இறந்த சில நாட்களில் டிவி நடிகை ப்ரெக்ஷா மேத்தா இனி வேலை கிடைக்குமோ இல்லையோ என்கிற கவலையில் இந்தூரில் உள்ள தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் யாரும் தூக்கு போட்டு தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ராஜேஷ் மக்களிடம் உதவி கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி