ஆப்நகரம்

ஆஸ்திரேலியாவில் பேருந்தில் இந்திய நடிகைக்கு நடந்த கொடுமை

இந்தியர் என்பதால் ஆஸ்திரேலியாவில் டிரைவர் ஒருவர் தன்னை திட்டி, பேருந்தில் இருந்து கீழே இறங்கச் சொன்னதாக நடிகை சாந்தினி பக்வானானி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Jul 2020, 4:22 pm
கொஹி அப்னா சா இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையானவர் சாந்தினி பக்வானானி. க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி, தேரே லியே, சந்தோஷி மா, ஏ ஹை ஆஷிகி, ரூப்- மர்த் நா நயா ஸ்வரூப், சஞ்சீவனி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சந்தானி இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
Samayam Tamil chandni bhagwanani


வேலை காரணமாக சாந்தினி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இடத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் உடனே நாடு திரும்ப முடியாமல் சாந்தினி ஆஸ்திரேலியாவில் சிக்கிக் கொண்டுள்ளார்.

முதலில் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் பின்னர் இரண்டு இந்திய பெண்களுடன் சேர்ந்து மெல்போர்ன் நகரில் அபார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிப்பது எளிது இல்ல. அதிகம் செலவாகிறது. சேர்த்து வைத்த பணம் எல்லாம் தீர்ந்து கொண்டிருக்கிறது என்று சாந்தினி தெரிவித்தார்.

இந்நிலையில் மெல்போர்ன் நகரில் பேருந்தில் சென்றபோது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து சாந்தினி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சாந்தினி பக்வானானி கூறியிருப்பதாவது,
இனிவெறி தொடர்பாக எனக்கு நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடி ரயில் இல்லை. அதனால் ஒரு இடத்தில் இறங்கி பேருந்து பிடித்து செல்ல வேண்டும். இந்த இடத்திற்கு பேருந்து செல்லுமா என்று டிரைவரிடம் நான் கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை.

ஒரு வேளை நான் சொன்னது அவருக்கு கேட்கவில்லையோ என்று நினைத்து என் இருக்கையில் அமர்ந்து கூகுள் மேப்பை ஆன் செய்தேன். கூகுள் மேப் வேறு மாதிரி காட்டியது. இதையடுத்து நான் மீண்டும் டிரைவரிடம் சென்று இந்த இடத்திற்கு தான் பேருந்து செல்கிறதா என்று கேட்டேன். நான் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து செல்வது போன்று தெரியவில்லையே, நான் இறங்க ஏதாவது நிறுத்தம் இருக்கிறதா என்று கேட்டேன்.

டிரைவரோ பதில் சொல்லாமல் போனில் பிசியாக இருந்தார். அதே சமயம் மற்றொரு பெண் அவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து செல்லுமா என்று கேட்டதற்கு உடனே ஆமாம் மேடம் என்றார். அந்த பெண் இந்தியர் இல்லை. மேலும் ஒருவர் கேட்டதற்கும் டிரைவர் பதில் அளித்தார்.

சரி இப்போது ஃப்ரீயாக இருக்கிறார் என்று நினைத்து நான் மீண்டும் கேட்டதற்கு டிரைவர் பதில் சொல்லாமல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். தயவு செய்து பதில் சொல்லுங்க, எங்கே செல்கிறோம் என்று எனக்கு தெரியவில்லை என்றேன். அதற்கு அவர் என்னை திட்டினார். மேலும் பேருந்தை பாதி வழியில் நிறுத்திவிட்டு கீழே இறங்குமாறு கூறினார். அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு அவரோ, யூ ஃப...ங் இந்தியன்ஸ் என்று திட்டினார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் பேருந்தில் இருந்து கீழே இறங்கிவிட்டேன். இனவெறி இன்னும் இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி