ஆப்நகரம்

Chetan Sharma : யார் இந்த சேத்தன் சர்மா? பலரும் அறியாத உண்மைகள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து பேச்சாளரும், தற்போதைய BCCI தேர்வு ஆணைய தலைவருமான சேத்தன் சர்மா தற்போது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறார். இந்திய கிரிக்கெட் ஆணையத்தில் நடக்க கூடிய பிரச்சனைகள் மற்றும் முன்னணி வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் மீது குற்றசாட்டுகள் சொல்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த நிலையில் BCCI தேர்வு ஆணைய தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 15 Feb 2023, 1:00 pm
உலக அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். அதே போல், இந்தியாவில் பல்வேறு இளைஞர்களுக்கும் கிரிக்கெட் வீரர்கள் கடவுளுக்கு இணையாக போற்றப்படுபவர்கள். ஆனால், தற்போதைய BCCI தேர்வு ஆணைய தலைவர் சேத்தன் சர்மா பேசி பரவி வரும் வீடியோவில் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. யார் இந்த சேத்தன் சர்மா? திடீரென்று இப்படி பேச காரணம் என்ன? அப்படி என்ன பேசினார் என்பதை கட்டுரையில் காணலாம்.
Samayam Tamil Chetan Sharma sting


யார் இந்த சேத்தன் சர்மா?
தனது 16வது வயதில் ஹரியானா மாநிலத்திற்காக கிரிக்கெட் ஆட துவங்கிய சேத்தன் சர்மா 23 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 65 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றில் வேக பந்து வீச்சாளராக இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். குறிப்பாக 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை அவர் எடுத்தது அவரது கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமாக பேசப்படும் நிகழ்வாகும்.

பல்வேறு ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை குவித்து இந்திய அணிக்கு வலு சேர்த்ததில் முக்கியமான நபராக அறியப்படுபவர் சேத்தன். அதே போல், 1986ம் ஆண்டில் Austral-Asia கோப்பை போட்டியில் அவர் வீசிய கடைசி பந்தால் இந்தியா தோல்வியை தழுவியதும் அவரின் கெரியரில் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பிறகு, 1996ம் ஆண்டு இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

பாஜகவில் சேத்தன் சர்மா!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட சேத்தன் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது பணியை துவங்கினார். பிறகு 2009ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதற்கு பின்பாகவே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தேசிய விளையாட்டு அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2020ம் ஆண்டு உலக அளவில் கிரிக்கெட்டில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான BCCI தேர்வு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

BCCI தேர்வு ஆணையத்தின் தலைவர்
இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் தொடர்ந்த அவர் 2022ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதை ஒட்டி இவரும் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிந்ததால் மட்டுமே அவர் நீக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டாலும், பலரும் இந்தியாவின் தோல்வி எதிரொலியாகவே அவர் நீக்கப்பட்டதாக கூறினார். இந்த நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் அதே தலைவர் பதவிக்கு அவரை பரிந்துரைத்து தலைவராக ஆக்கியது கிரிக்கெட் வாரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றச்சாட்டு
மீண்டும் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தற்போது வைரல் சர்ச்சையில் மாட்டியிருக்கிறார் சேத்தன் சர்மா. ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் குறித்து உளறி கொட்டியிருக்கிறார் சேத்தன் ஷர்மா.

அந்த வீடியோவில் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் பாஸ் ஆவதற்காக தனியார் டாக்டர்கள் மூலம் BCCI விதிமுறைகளுக்கு புறம்பான போதை மருந்து வகையில் வரும் ஊசிகள் போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதன் மூலமே தகுதி இல்லாத வீரர்கள் கூட தேர்வில் பாஸ் ஆகி மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலியின் அழுத்தம் மற்றும் அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே இருந்த பிரச்சனையால்தான் அவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் என்றும் கூறியுள்ளார்.

அதே போல், ட்ரஸ்ஸிங் ரூமில் ரோஹித் அணி , விராட் அணி என இரு பிரிவாகத்தான் வீரர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பும்ரா தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆட உடல்ரீதியாக தகுதி இல்லாத போதும் விளையாட வைக்கப்பட்டார் என்பது குறித்தும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி